×

சீனாவில் அதிகரிக்கும் நிமோனியா சுகாதார தயார்நிலையை ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு உத்தரவு: ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடிதம்

புதுடெல்லி: சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் உருவாகி உலகையே கடுமையாக பாதித்ததை போல, தற்போது வடக்கு சீனாவில் சுவாச நோயான நிமோனியா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இது குழந்தைகளை அதிகமாக பாதித்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய சுகாதார செயலாளர், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த சில வாரங்களாக வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சுவாச நோயை கட்டுப்படுத்த தயாராக இருப்பதை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானதாகிறது. இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை.

அதே சமயம், சுவாச நோய் பாதிப்பை கட்டுப்படுத்த கண்காணிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பொது மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், மருத்துவ ஆக்சிஜன், சுவாச பாதுகாப்பு உபகரணங்கள், சோதனைக் கருவிகள், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவை போதிய அளவில் இருக்கிறதா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா சூழலில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு உத்திக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும். சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் சளி மாதிரிகளை வைரஸ் ஆராய்ச்சி மற்றும் ஆய்வகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் மிகப்பெரிய பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்க முடியும். இவ்வாறு கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* புதிய வைரஸ் பாதிப்பல்ல விளக்கம் அளித்தது சீனா

நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு குறித்து சீனா விளக்கம் அளிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணைய செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘‘இன்ப்ளூயன்சா வைரஸ், ரைனோவைரஸ், ஆர்எஸ்வி, அடினோவைரஸ் மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற பாக்டீரியாக்கள் உள்ளிட்ட பொதுவான வைரஸ்கள் காரணமாக சமீபத்திய சுவாச நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக அறியப்படாத எந்த வைரசும் இதற்கு காரணமல்ல. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதிலிருந்து முதல் முழு குளிர்காலம் என்பதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த அதிக கிளீனிக் திறக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.

The post சீனாவில் அதிகரிக்கும் நிமோனியா சுகாதார தயார்நிலையை ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு உத்தரவு: ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடிதம் appeared first on Dinakaran.

Tags : China ,Union health ministry ,New Delhi ,North ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன